Saturday 22 June 2013

இரண்டு கேள்விகள்!

இரண்டு கேள்விகள்!

இவ்வுலகில் உயிர் வாழ பணம் தேவை. ஆனால் பணமே வாழ்க்கையல்ல. இவ்வுலகில் இறைவன் நமக்கு அளித்துள்ள செல்வமும் - செல்வாக்கும் மறுமை வாழ்வை தேடிக்கொள்வதற்காக மட்டுமே!
பணத்தைப் பற்றி அல்லாஹ் தனது திருமறை அத்யாயம் 2ல் வசனம் 267ல் "நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் சம்பாதனை செய்த பணத்திலிருந்து நற்செலவு செய்யுங்கள். அதிலிருந்து நீங்கள் கெட்டதை நாடாதீர்கள்'' என்கிறான்.
நாம் பேசும் பொய்களில் பணம் பற்றிய பொய்களே அதிகம். பணத்தின் மீதுள்ள மோகத்தால் உண்டாகும் தவறுகள் எத்தனை எத்தனையோ!
இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமையாகிய ஜகாத்தை (ஏழை வரி) தன்னிலும் கீழ்நிலையிலுள்ள வறியவருக்கு நூற்றுக்கு இரண்டரை சதவிகிதம் கட்டாயம் கொடுத்தே ஆக வேண்டும் என வலியுறுத்துகிறது. எனவே, பணம் படைத்தவன் ஜகாத் கொடுக்காதிருந்தால், அது அவனது பணத்தின் மீது காட்டும் ஆசையாகும். நலிந்தோர்க்கு உதவினால் இறைவன் மீது காட்டும் நேசமாகும்.
பணம் சேர்க்கக் கருதி பொய் பேசுவது, அடுத்தவர் மீது பகைமை காட்டுவது, லஞ்சம் வாங்குவது, வட்டி வாங்குவது போன்ற தீய செயல்கள் அனைத்தும் பணத்தின் மீது மேற்கொண்டுள்ள வெறியைத்தான் காட்டுகிறது.
நபித்தோழர்களிடம் இருந்த பணம் மனித சமுதாயத்திற்கே பயன்பட்டு வந்தது. அன்னை கதீஜா (ரலி), அபூபக்கர்(ரலி), அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி), உதுமான் கனி (ரலி) ஆகிய நபித் தோழர்கள் பெரும் செல்வந்தர்களாக வாழ்ந்து வந்தனர்.
அவர்கள் அனைவரும் செல்வத்தை நேசிக்கவில்லை. இறைவனின் நேசம் ஒன்றினையே பற்றுகொள்ள இறை வழியில் தனது செல்வம் அனைத்தையும் செலவிட்டனர்.
"அல்லாஹ் தன் கருணையினால் தங்களுக்கு கொடுத்தவற்றைக் கொண்டு (அல்லாஹ்வுடைய பாதையில் செலவு செய்யாமல்) கஞ்சத்தனம் செய்கிறவர்கள், அது அவர்களுக்கு நல்லது என்று திண்ணமாக எண்ணிக்கொள்ள வேண்டாம். அப்படி அல்ல, அது அவர்களுக்கு தீமைதான்; எதில் அவர்கள் கஞ்சத்தனம் செய்வார்களோ, அது இறுதி நாளில் அவர்கள் கழுத்தில் நெருப்பிலான மாலையாக அணிவிக்கப்படும்.
வானங்கள், பூமி ஆகியவற்றின் உரிமை அல்லாஹ்வுக்கே உரியது; அல்லாஹ் நீங்கள் செய்பவற்றைப் பற்றி நன்கறிந்தவனாக இருக்கிறான்.
தேவைக்கும் ஆசைக்கும் உள்ள வித்தியாசம் ஒரு நூலிழைதான். அதனைப் புரிந்துகொண்டால் சொத்து- சுகமுள்ள வாழ்க்கையை ஈமானுள்ள (இறை நம்பிக்கை) வாழ்க்கையாக மாற்றி விடலாம்'' என்று அல்லாஹ் தனது திருமறை அத்யாயம் 3ல் வசனம் 180ல் கூறுகிறான்.
ஒருவர் மரணமடைந்துவிட்டால், ""இவர் எவ்வளவு சொத்து சுகங்களைச் சேர்த்து விட்டுச் சென்றுள்ளார்?'' என்கின்றனர். ஆனால், மண்ணறையில் வானவர்களோ, ""நீ மறுமை வாழ்விற்காக எதனைக் கொண்டு வந்துள்ளாய்?'' என்கின்றனர். இரண்டு கேள்விகளில்தான் ஒரு மனிதனுடைய சீரிய வாழ்வு அமைந்துள்ளது.
"தக்வா' எனும் இறையச்சம்தான் ஒரு மனிதனை உயர் நிலையில் சேர்க்கும். பணத்தின் மீதுள்ள நேசம் தாழ்வு நிலையை அடையும். எனவே, இறையச்சத்துடன், நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் வாழ்ந்து காட்டிய பாதையில் நாமும் வாழ்ந்து காட்டுவோம்.


No comments:

Post a Comment