Friday 10 May 2013

நல்லோரின் நட்பு!


மனிதர்கள் தங்களுக்குள் உண்டாக்கிக்கொள்ளக் கூடிய நட்பிற்கு இஸ்லாம் மார்க்கம் அதிக மதிப்பளிக்கிறது. சிரித்து மகிழவும், வீண் விளையாட்டில் பொழுதைக் கழிக்கவும் மட்டுமே நட்பு என்ற சொல் பொருளாகாது. நட்பு என்பது ஓர் உன்னதமான செயலாகும்.
ஒவ்வொரு மனிதருக்கும் நண்பர்கள் இருப்பது போல நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும் நண்பர்கள் இருந்தனர். நபிகளாருடன் சேர்ந்தே இருப்பவர்களை "ஸஹாபாக்கள்' (நபித்தோழர்கள்) என்று அழைத்தனர்.
நபிகளாருக்கு பின் இஸ்லாமிய ஆட்சியின் கலீஃபாவாக (ஜனாதிபதி) அமர்த்தப்பட்டவர் நபிகளாரின் உற்ற நண்பராகிய அபூபக்கர் (ரலி) அவர்களே ஆவார்.
நட்புக்கு அழகிய முன் மாதிரியாக இருப்பவர் யார் என்பதை நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் விளக்கியுள்ளதைக் காண்போம்.
"'நல்ல நண்பருக்கு எடுத்துக்காட்டு கஸ்தூரி விற்பவரைப் போன்றவராவார். உமக்கு அதைத் தரலாம் அல்லது அவரிடம் அதை நீர் வாங்கலாம். அல்லது அவரிடமிருந்து நறுமணத்தையேனும் நீர் பெறலாம். கெட்ட நண்பருக்கு எடுத்துக்காட்டு இரும்புப் பட்டறையில் நெருப்பை ஊதுபவர் போன்றவராவார். உமது ஆடையை அவர் எரித்து விடலாம் அல்லது அவரிடமிருந்து துர்வாடையையாவது அடைந்தே தீருவீர் (நூல்:புகாரி, எண்: 2110, முஸ்லிம்: எண்: 5124)''.
இரு சகோதரர்கள் சந்தித்துக்கொண்டால், ஸலாம் கூறுவதையும், "முஸô ஃபஹா' (கை கொடுத்தல்), "முஆனகா' (அணைத்துக் கொள்வது) செய்வதையும் இஸ்லாம் வலியுறுத்துகிறது. இதனால் நண்பர்களுக்கிடையே அன்பும் நேசமும் அதிகரிக்கும்.
நீங்கள் வளமாக இருக்கும்போது உங்கள் நண்பர்கள் உங்களைப் புரிந்துகொள்வார்கள். ஆனால் நீங்கள் வறுமையாக இருக்கும்போது உங்கள் நண்பர்களை நீங்கள் புரிந்துகொள்ளலாம். நட்புக்கு பணம், பதவி, செல்வாக்கு போன்ற மேல் பூச்சு தேவை இல்லை.
நபிகளார் பல நேரங்களில் தமது தோழர்களின் பண்பினையும், அவர்களது செயல்பாடுகளையும் பாராட்டி ஊக்கப்படுத்தியுள்ளார்கள். அதுபோல், அவர்களது தவறுகளை நேருக்கு நேர் கண்டித்து, திருந்திக்கொள்ள வழி வகுத்துத் தந்துள்ளார்கள்.
நமக்கு எத்தனை நண்பர்கள் இருக்கிறார்கள் என்ற எண்ணிக்கை முக்கியமல்ல. ஆனால், நம்மிடம் நட்பு வைத்திருப்பதை பெருமையாக எண்ணி மகிழ்ச்சி அடைபவர்கள் எத்தனை பேர் என்ற எண்ணிக்கையே மிக மிக முக்கியம்.
நமக்கும் நல்லோர்களின் நட்பு கிடைத்து அதன் மூலம் வெற்றி கிடைக்க இறைவன் நல்லருள் புரிவானாக.
By ஜி. அஹ்மது
Thanks Dinamani Vellimani 10-05-2013