Thursday 12 December 2013

சொல்லும் செயலும்



 
 
 
 
     சொல்லால் ஓரளவுதான் வெற்றி பெறலாம். ஆனால், செயலால் முழு வெற்றியும் பெற்றிட முடியும். நாம் சொன்ன சொல்லை மறந்துவிடலாம். ஆனால் நமது செயல் பிற்காலங்களில் நின்று மிளிரும். எனவே நாம் எந்தச் செயலைச் செய்தாலும் முறையாகத் தவறின்றிச் செய்ய வேண்டும். அப்படிச் செய்பவரே உண்மையான முஸ்லிம்.

இறைவன் தேவையற்றவன்; இறைவனுக்காகச் செலவு செய் வதை அவன் ஏற்றுக்கொள்வதில்லை. முதலில் தாய், தந்தை, சகோதர-சகோதரிகள், உற்றார்-உறவினர், தேவையுள்ளோர், அனாதைகள், வழிப்போக்கர்கள் என்றுதான் இறைவன் வரிசைப்படுத்துகிறானே தவிர, தனக்காகச் செலவிட வேண்டும் என ஒருபோதும் சொன்னதில்லை. எனவே முஸ்லீம்களின் அடையாளம் கடுமையான, இறை நம்பிக்கை மட்டுமே.

அல்குர்ஆனையும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சொல்லையும்-செயலையும் பின்பற்றுகிறோம் எனச் சொல்லிக்கொண்டு அதற்கு எதிராக வாழ்வை அமைத்துக்கொள்பவர்கள் உண்மையான முஸ்லிம்கள் அல்லர். நபிகளாரின் திருமணங்கள் வெறும் பேரீச்சம் பழங்களை மட்டுமே உணவாக வைத்து நடைபெற்றன. ஆனால், இக்காலத் திருமணங்கள் ஆயிரம் பேருக்குப் பிரியாணி விருந்து, 100 பவுன்கள், சீர் பொருட்கள் எனச் சீர்கெட்டுக் காணப்படுகின்றன.

நபிகளின் சொல்- செயல்படி எளிய வாழ்க்கை மற்றும் சகோதரத்துவ ஒற்றுமைகள் ஆகியவற்றை எக்காலத்திலும் முஸ்லீம்கள் மறக்கக் கூடாது  .
 

 
நாகை ஜி. அஹ்மது
 
Thanks to The Hindu Tamil News Paper
Published @ 12-12-2013 


Saturday 30 November 2013

பொறுமையின் சிகரம்...................


ஒரு மனிதன், உடலில் நோய்கள், துன்பங்கள், இறை சோதனைகள் எதுவுமின்றி நலமுடன் இருந்தால் மட்டுமே இறைவனை வணங்கி வழிபட இயலும் என எண்ணுகின்றான்.
இதற்கான பதிலை இறைவன் தனது திருமறையில் அத்.3 - இல், வசனம் 186-இல் இப்படி கூறுகின்றான். "(முஃமின்களே) இறை நம்பிக்கைக் கொண்டோர்களே! உங்கள் ஆத்மாக்களிலும் நிச்சயமாக  நீங்கள் சோதிக்கப்படுவீர்கள்''.
ஒரு மனிதனுக்கு அனைத்து சோதனைகளும் வந்த பின்தான் இறைவனுடைய நினைவே வரும். உடனே அவனை வணங்க முற்படுவான். ஆனால், அம்மனிதன் உலக இன்ப வாழ்வில்  திளைத்திருக்கும்போது இறைவனை மறந்து கர்வமும், இறுமாப்பும் கொண்டலைவான். ஆனால், ஈமானின் (இறை நம்பிக்கை) அடையாளம், எந்நிலையிலும் இறைவனை வணங்கி வழிபடுதலே  சிறப்பாகும்.
துன்ப துயரங்களைக் காட்டி கடமையான வணக்க வழிபாடுகளை செயல்படுத்தாதவனிடம், இறைவன் மறுமையில் நபி ஐயூப் (அலை) அவர்களையே எடுத்துக் காட்டாகக் கூறி, ""இவரை விடவா நீ  பிணியாளனாக, துன்பத்தில் துயரப்படுபவனாக, சோதனைக்கு உட்பட்டவனாக இருந்தாய்?'' எனக் கேட்பான் என்று இஸ்லாமிய வரலாறு கூறுகிறது.
ஐயூப் நபி இறைவனின் நல்லடியாராகவும், செல்வந்தராகவும் வாழ்ந்து வந்தார்கள். ஒரு நாள் இப்லீஸ் (சாத்தான்) இறைவனிடம் ""நான் உனது நல்லடியார்களை எனது வழி கேட்டில் ஆக்கி விட்டேன்''  எனப் பெருமை கொண்டான்.
உடனே, ஐயூப் நபியைக் காட்டி, "இவரை உனது வழிக்கேட்டில் ஆழ்த்த முடிந்தால் செய்'' என்றான் இறைவன்.
முதலில் ஐயூப் நபியின் செல்வம் அனைத்தையும் அழித்தான். அடுத்து அவரது மக்களை மரணிக்கச் செய்தான். இவ்வளவு கொடுமைகள் நடந்தும் நபியவர்கள் அணுவளவும் "பொறுமையை  இழக்கவில்லை. இறுதியாக, நபியின் உடல் முழுவதும் கொடிய புண் ஏற்படச் செய்தான். அவற்றில் எண்ணற்ற புழுக்கள் நெளிந்தன. ஆனால், நபியின் உடலில் ஏற்பட்ட அரிப்போ, இவர்களைக் கொன்றுக்  கொண்டிருந்தது.
இக்கொடுமையினைக் கண்ட நபியின் மனைவி ரஹ்மா அவர்கள், ""இத்துன்பத்திலிருந்து மீள இறைவனிடம் இறைஞ்சக் கூடாதா?'' என்றனர்.
"நலமாகவும் - வளமாகவும் எண்பது ஆண்டுகள் வாழ்ந்துவிட்டேன். இறை சோதனையிலிருந்து மீள அல்லாஹ்விடம் இறைஞ்ச நாணமுறுகிறேன்'' என்றனர் ஐயூப் நபி.
மேலும், "இறைவனை பரிபூரணமாக வணங்கவும், அவனை எண்ணி துதிக்கவும் இயலவில்லையே...?'' என வருந்தி கண்ணீர் விட்டு அழுதார்கள் ஐயூப் நபி.
இறுதியாக, ஐயூப் நபியின் பொறுமையையும், துன்பத்தில்கூட தன்னை நினைத்து வருந்தியும், தன்னால் முடிந்த வரை வணங்கி வழிபட்டதையும் ஏற்றுக்கொண்டு, இறைவன் வானவர் தலைவர் ஜிப்ரயீல்  (அலை) அவர்களை அனுப்பி, நபி ஐயூப் (அலை)அவர்களுக்கு ஏற்பட்டிருந்த நோயை குணப்படுத்தும்படி ஏவினான் என்பது வரலாறு.
பிறக்கும்போதே சோதனையின் முழு உருவினைப் பெற்றவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள். ஓரிறைக் கொள்கையை ஏற்க மறுத்தவர்களால் ஏற்பட்ட துயரங்கள் எண்ணிலடங்கா. இருப்பினும்  பொறுமையின் சிகரமாக வாழ்ந்து வாகை சூடினார்கள் கண்மணி ரசூல் (ஸல்) அவர்கள்.
எனவே, நாமும் நமது வாழ்வில் ஏற்படும் அனைத்து சோதனைகளையும் பொறுமையோடு ஏற்று இறைவனைத் தொழுது, இறுதி நபி(ஸல்) அவர்களின் ஷஃபாஅத்தைப் (பரிந்துரை) பெறுவோமாக.


ஜி. அஹ்மது


First Published : 28 November 2013 03:49 PM IST
Thanks to dinamani vellimani 

Friday 22 November 2013

சுமைகளைப் பகிர்பவன்.................


நபிகளார் ஒரு நாள் இரவு மக்காவின் தெரு வழியாகச் சென்று கொண்டிருந்தார். மக்கள் நடமாட்டமில்லாத ஓரிடத்தில் ஒரு மூதாட்டி மூட்டைகளுடன் தூக்க இயலாச் சுமைகளோடு நின்று கொண்டிருந்தார்
அந்த மூதாட்டியிடம் நபி(ஸல்) அவர்கள், “தாங்கள் எங்கே செல்ல வேண்டும்?’’ எனக் கேட்டுச் சுமைகளை தன் தலை மீது வைத்துக்கொண்டார். இருவரும் நடந்து செல்லும்போது, “இந்த இரவு நேரத்தில் தூக்க இயலாத சுமைகளோடு எங்கே செல்கிறீர்கள்?’’ என அண்ணலார் கேட்டார்கள்.
“இந்த ஊரில் யாரோ முஹம்மது என்பவர், புதிய கொள்கை ஒன்றினைக் கூறி மக்கள் மனதை மாற்றி வருகிறாராம்.
எங்களது மூதாதையர் வணங்கி வந்த தெய்வங்களை எல்லாம் வணங்கக் டாது என்கிறாராம். அல்லாஹ் ஒருவரை மட்டுமே வணங்கி வழிபட வேண்டுமென்று சொல்கிறாராம். நான் அவரைப் பார்த்ததுகூட இல்லை. எனவே நான் அந்த முஹம்மதை சந்தித்தால், மனம் மாறி எங்களது மூதாதையரின் கொள்கைகளை விட்டு விடுவேனோ என்கிற அச்சத்தால் தான், இந்த ஊரை விட்டே செல்ல இருக்கிறேன்’’ என்று படபடவெனப் பொிந்து தள்ளினார் அந்த மூதாட்டி.
நபிகளார் தலைச் சுமையொடு ஊருக்கு வெளியே மூதாட்டியுடன் நடந்து செல்லும்போது ஒரு குறிப்பிட்ட இடம் வந்ததும் அந்த மூதாட்டி, “போதும், இனி நான் தனியாகப் பிரயாணம் செய்து கொள்வேன். நீங்கள் என்னுடன் வர வேண்டாம்” எனக் றிவிட்டு,
“ஆமாம், இந்த இரவு நேரத்தில் நான் தங்களிடம் உதவி கேட்காமலேயே எனக்கு உதவி செய்தீர்களே, தாங்கள் யார்? ” என்று கேட்டார் மூதாட்டி.
“ நீங்கள் இவ்வளவு நேரம் எந்த முஹம்மதைப் பற்றிக் கூறி, அவரை சந்திக்கவே கூடாது என்று இந்த ஊரை விட்டே வெளி யேறுகிறீர்களோ, அந்த முஹம்மது (அல்லாஹ்வின் தூதர்) நான்தான்’’ என நபிகள் நாயகம் பணிவாகக் கூறி முடித்தார்கள்.
அந்த மூதாட்டி, நபியின் அன்பைக் கண்டு பெரிதும் ஆச்சரியமடைந்தார்.


நாகை ஜி.அஹ்மது
Thanks  to Tamil.thehindu.com
posted 21-11-2013

இளமையும் முதுமையும்....


இவ்வுலகில் நாம் வாழ தாயின் கருவறையில் நம்மைப் படைத்த இறைவன், இங்கிருந்து மண்ணறை செல்லவும் செய்கின்றான்.
"எதையுமே நீங்கள் அறியாதவர்களாக இருந்த நிலையில், அல்லாஹ் உங்களை - உங்களுடைய தாய்மார்களின் வயிறுகளிலிருந்து வெளியாக்கினான். இன்னும் உங்களுக்கு செவிப் புலனையும், பார்வையையும், இதயத்தையும் அமைத்தான், நீங்கள் நன்றி செலுத்துவதற்காக''(அல்குர் ஆன்: 16:78).
"நாம் பிறக்கும்போது நமக்குப் பல் இல்லை. சுயமாக எங்கும் செல்ல இயலாது. உடல் வலி,வேதனை,நோய் போன்றவை ஏற்பட்டால் அழத்தான் முடியும். எந்த உணவு ஜீரணிக்குமோ அந்த உணவே கொடுக்கப்பட்டது. பிறரால் ஊட்டப்பட்டோம்.
அல்லாஹ் - அவன் எத்தகையவன் என்றால் (ஆரம்பத்தில்) பலவீனத்திலிருந்து உங்களை அவன் படைத்தான். பலவீனத்திற்குப்பின் (உங்களுக்கு) சக்தியை உண்டாக்கினான். மீண்டும் பலவீனத்தையும் (முதுமையின்)நரையையும் உண்டாக்கினான். தான் விரும்பியதைப் படைக்கிறான், அவன் முற்றிலும் அறிந்தவன் - சக்தியுள்ளவன் (அல்குர் ஆன்:30:54)''.
அல்லாஹ் குர்ஆனில் கூறியுள்ள அனைத்தும் நமக்கு நிச்சயம் நடைபெற உள்ளது. அதன் பெயர்தான் முதுமை. நாற்பது வயதை எட்டிய பின் முதுமை ஆரம்பமாகிறது. முதலில் நாம் இழப்பது பற்களைத்தான். அடுத்து பார்வையின் சக்தி குறைய ஆரம்பித்துவிடும். கேட்கும் செவித்திறனும் குறைந்து செவிட்டுத்தனம் ஆரம்பமாகும். முழங்காலில் வலி ஏற்பட்டு உட்கார்ந்தால் எழ முடியாது. எழுந்தால் உட்கார முடியாது. பிறகு ஞாபக சக்தி குறைந்து மறதி உண்டாகும். தலைமுடி வெண்மையாக மாறும்.
டை (கறுப்புச் சாயம்) அடிப்பவன் மரணத்தை தொட்டுவிட்ட ஏமாளி. இளமையோ, வயதையோ மீட்க முடியாது என்பதை விளங்கிக்கொள்ளுங்கள்.
"எவரோ மரணம் அடைந்துவிட்டால் அழுகிற ஒருவர், தனது மரணத்திற்காக அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புக் கேட்டுக் கொள்ளட்டும்'' என இரண்டாம் உமர்(ரலி) கூறியுள்ளார்.
இளமையில் நற்செயலின்றி கழித்தவர்கள் முதுமையிலும் அவ்வாறிருப்பது நல்லதல்ல. உலக ஆசாபாசங்களை குறைத்துக்கொண்டு மண்ணறைக்குத் தேவையான தயாரிப்புகளை செய்து கொள்வதே அறிவுடமையாகும். எனவே, இளமையிலும் முதுமையிலும் அல்லாஹ் இரசூல் கூற்றின்படி நடந்து சுவன பதியை அடைவோமாக.



Thanks to Dinamani
First Published : 21 November 2013 04:14 PM IST

Saturday 9 November 2013

வாழ்க்கையின் தொடக்கம் அழுகை


நாகை.ஜி.அஹ்மது

உலகில் பிறக்கும் அனைத்து மனிதனின் வாழ்க்கையின் தொடக்கமும் அழுகைதான். அங்கே தொடங்கும் நமது வாழ்க்கை அழுகையிலேயே முடிகிறது.
குழந்தையாக இருந்தபோது நமது அழுகை அனிச்சை செயல்; அறியாமலே அழுதோம்.
முதல் அழுகை மூச்சு விடுவதற்கு, நுரையீரல்களை ஒழுங்குப்படுத்திக் கொள்ள; அடுத்தடுத்த அழுகைகள் பசியை அறிவிக்க. குழந்தைகள் இவ்வுலகில் பிறக்கும் போது அழுது கொண்டே பிறக்கின்றன. குழந்தை பிறந்து ஓராண்டு வரையில் அழுதுகொண்டேதான் இருக்கும். அதன் அழுகையை நிறுத்த வேண்டாம்.
ஏனென்றால், குழந்தை பிறந்தது முதல் நான்கு மாதங்கள் வரை அழுகின்ற அழுகையானது 'கலிமா'(இஸ்லாத்தின் மூலமந்திரம்) ஆக இருக்கும். அடுத்த நான்கு மாத அழுகை நபிகள் நாயகம்(ஷல்) அவர்கள் கூறும் 'ஸ்லவாத்'( நபி புகழ்) ஆக இருக்கும். அடுத்த நான்கு மாத அழுகை தனது பெற்றோருக்காக கேட்கும் 'துஆ'(இறைஞ்சுதல்) ஆக இருக்கும்.
வளரும் போதும், வளர்ந்த பிறகும் அழுவதை அறிந்து அழுகின்றோமா? எப்போது அழலாம்-எப்படி அழலாம்-எங்கே அழலாம்? என்பதையெல்லாம் எப்படித் தீர்மானிக்கின்றோம்? நாமே தீர்மானிக்கின்றோமா? அல்லது மற்றவர்கள் தீர்மானிக்கின்றார்களா?
யோசித்துப் பாருங்கள்!
பெண்கள் எதற்கெடுத்தாலும் அழுவார்கள். ஆனால், ஆண்கள் அப்படி இல்லை. ஆண்கள் அழவே கூடாது! ஏன் இப்படி? அழுகை என்பது பலவீனம் என்கிற கருத்துதான் அடிப்படை. பெண்களின் அழுகை அவர்களின் பலவீனமாகவே புரிந்து கொள்ளப்படுகிறது.
அல்லற்பட்டு ஆற்றாத கண்ணீர்என்று திருவள்ளுவர் சொல்வது துன்பத்தின் வெளிப்பாடுதான். கவிக்கோ அப்துல் ரஹ்மான்,'தட்டாதே திறந்திருக்கிறது' என்ற நூலில் கண்ணீர் உப்பு கலக்காவிட்டால் வாழ்க்கை சுவைக்காதுஎன இரண்டே வரிகளில் அழுங்கள் அது நல்லது என்று சுவைப்பட கூறியுள்ளார்.
அழுகை என்பது ஒரு வெளிப்பாடு; மகிழ்ச்சியைப் போல. வருத்தம் என்பது ஓர் உணர்ச்சி. மகிழ்ச்சியை வெளிப்படுத்த பல வழிகள் இருப்பது போல வருத்தத்தை வெளிக்காட்ட பல வெளிப்பாடுகள் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் அழுகை.
எனவே உங்களுக்கு ஏதாவது இன்னல்கள் ஏற்பட்டால் அழுது உங்கள் சுமையைக் குறைத்துக்கொள்ளுங்கள்.

Thanks Tamil.TheHindu News Paper Published @ 09-11-2013

Saturday 22 June 2013

இரண்டு கேள்விகள்!

இரண்டு கேள்விகள்!

இவ்வுலகில் உயிர் வாழ பணம் தேவை. ஆனால் பணமே வாழ்க்கையல்ல. இவ்வுலகில் இறைவன் நமக்கு அளித்துள்ள செல்வமும் - செல்வாக்கும் மறுமை வாழ்வை தேடிக்கொள்வதற்காக மட்டுமே!
பணத்தைப் பற்றி அல்லாஹ் தனது திருமறை அத்யாயம் 2ல் வசனம் 267ல் "நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் சம்பாதனை செய்த பணத்திலிருந்து நற்செலவு செய்யுங்கள். அதிலிருந்து நீங்கள் கெட்டதை நாடாதீர்கள்'' என்கிறான்.
நாம் பேசும் பொய்களில் பணம் பற்றிய பொய்களே அதிகம். பணத்தின் மீதுள்ள மோகத்தால் உண்டாகும் தவறுகள் எத்தனை எத்தனையோ!
இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமையாகிய ஜகாத்தை (ஏழை வரி) தன்னிலும் கீழ்நிலையிலுள்ள வறியவருக்கு நூற்றுக்கு இரண்டரை சதவிகிதம் கட்டாயம் கொடுத்தே ஆக வேண்டும் என வலியுறுத்துகிறது. எனவே, பணம் படைத்தவன் ஜகாத் கொடுக்காதிருந்தால், அது அவனது பணத்தின் மீது காட்டும் ஆசையாகும். நலிந்தோர்க்கு உதவினால் இறைவன் மீது காட்டும் நேசமாகும்.
பணம் சேர்க்கக் கருதி பொய் பேசுவது, அடுத்தவர் மீது பகைமை காட்டுவது, லஞ்சம் வாங்குவது, வட்டி வாங்குவது போன்ற தீய செயல்கள் அனைத்தும் பணத்தின் மீது மேற்கொண்டுள்ள வெறியைத்தான் காட்டுகிறது.
நபித்தோழர்களிடம் இருந்த பணம் மனித சமுதாயத்திற்கே பயன்பட்டு வந்தது. அன்னை கதீஜா (ரலி), அபூபக்கர்(ரலி), அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி), உதுமான் கனி (ரலி) ஆகிய நபித் தோழர்கள் பெரும் செல்வந்தர்களாக வாழ்ந்து வந்தனர்.
அவர்கள் அனைவரும் செல்வத்தை நேசிக்கவில்லை. இறைவனின் நேசம் ஒன்றினையே பற்றுகொள்ள இறை வழியில் தனது செல்வம் அனைத்தையும் செலவிட்டனர்.
"அல்லாஹ் தன் கருணையினால் தங்களுக்கு கொடுத்தவற்றைக் கொண்டு (அல்லாஹ்வுடைய பாதையில் செலவு செய்யாமல்) கஞ்சத்தனம் செய்கிறவர்கள், அது அவர்களுக்கு நல்லது என்று திண்ணமாக எண்ணிக்கொள்ள வேண்டாம். அப்படி அல்ல, அது அவர்களுக்கு தீமைதான்; எதில் அவர்கள் கஞ்சத்தனம் செய்வார்களோ, அது இறுதி நாளில் அவர்கள் கழுத்தில் நெருப்பிலான மாலையாக அணிவிக்கப்படும்.
வானங்கள், பூமி ஆகியவற்றின் உரிமை அல்லாஹ்வுக்கே உரியது; அல்லாஹ் நீங்கள் செய்பவற்றைப் பற்றி நன்கறிந்தவனாக இருக்கிறான்.
தேவைக்கும் ஆசைக்கும் உள்ள வித்தியாசம் ஒரு நூலிழைதான். அதனைப் புரிந்துகொண்டால் சொத்து- சுகமுள்ள வாழ்க்கையை ஈமானுள்ள (இறை நம்பிக்கை) வாழ்க்கையாக மாற்றி விடலாம்'' என்று அல்லாஹ் தனது திருமறை அத்யாயம் 3ல் வசனம் 180ல் கூறுகிறான்.
ஒருவர் மரணமடைந்துவிட்டால், ""இவர் எவ்வளவு சொத்து சுகங்களைச் சேர்த்து விட்டுச் சென்றுள்ளார்?'' என்கின்றனர். ஆனால், மண்ணறையில் வானவர்களோ, ""நீ மறுமை வாழ்விற்காக எதனைக் கொண்டு வந்துள்ளாய்?'' என்கின்றனர். இரண்டு கேள்விகளில்தான் ஒரு மனிதனுடைய சீரிய வாழ்வு அமைந்துள்ளது.
"தக்வா' எனும் இறையச்சம்தான் ஒரு மனிதனை உயர் நிலையில் சேர்க்கும். பணத்தின் மீதுள்ள நேசம் தாழ்வு நிலையை அடையும். எனவே, இறையச்சத்துடன், நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் வாழ்ந்து காட்டிய பாதையில் நாமும் வாழ்ந்து காட்டுவோம்.


Friday 14 June 2013

சமுதாயம் அமைதியாகும்!.......


மனித நேயமிக்கவர் அண்டை வீட்டாரோடு மிகச் சிறந்த உறவைக் கொண்டிருக்க வேண்டும் என இஸ்லாம் வலியுறுத்துகிறது. மேலும், எவரும், சொல்லாத மிக உன்னத வழியில் மனித உறவுகளைச் சீரமைப்பதில் இஸ்லாம் தனித்து நிற்கிறது.
ஒவ்வொருவரின் வாழ்வில் திடீரென ஏற்படும் நல்லது - கெட்டது போன்ற சம்பவம் ஏற்படின் உடனே முன் நின்று ஆவண உதவி, ஒத்தாசைகளை செய்பவர் அண்டை வீட்டாரே. நமது சொந்த பந்தங்கள் தகவல் தெரிந்தபின்தான் வர இயலும். இது யதார்த்தமான உண்மையாகும்.
அண்டை வீட்டாருக்கு நன்றி செலுத்தும்படி இறைவன் அல்குர்ஆன் அத்யாயம் 4, வசனம் 36ல் கூறுவதைக் காண்போம்:
"அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள். அவனுக்கு இணை வைக்காதீர்கள். தாய் - தந்தையர்க்கு நன்றி செலுத்துங்கள். உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும், அண்டை வீட்டாருக்கும், நண்பர்களுக்கும், பணியாளர்களுக்கும் நன்றி செலுத்துங்கள். எவன் கர்வம் கொண்டு பெருமையாக நடக்கிறானோ, அவனை நிச்சயமாக அல்லாஹ் நேசிப்பதில்லை''.
நபித் தோழர் ஒருவர், ""அண்டை வீட்டாரிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும்?'' என்று அண்ணலாரிடம் கேட்டார்.
"அண்டை வீட்டாரைக் காணும்போது புன்முறுவல் பூப்பது, அவரைக் காணவில்லை என்றால் அவரைப் பற்றி விசாரிப்பது, அவர் வழித் தவறி விட்டால், அவரை நேர்வழிப்படுத்துவது, அவரது நற்பண்புகளை பரவச் செய்வது, அவரது குறைகளை மறைப்பது போன்ற நற்செயல்களைச் செய்ய வேண்டும்.
அண்டை வீட்டாருக்கு நோய் ஏற்பட்டால் சென்று நலம் விசாரித்து ஆறுதல் கூறுவது, அவர்களின் சுக துக்கங்களில் பங்குகொண்டு நன்மைகளைச் செய்து தேவைகளைப் பூர்த்தி செய்வது, மற்றும் அவர்கள் கடன் கேட்டால் கொடுத்து உதவுவது.
அண்டை வீட்டார் மரணித்துவிட்டால் அவரது உடலை அடக்கம் செய்யும் வரை சென்று நல்லடக்கத்தில் பங்கேற்பது, அவரது பிள்ளைகள் மீது இரக்கம் காட்டுவது போன்ற நற்செயல்களைச் செய்ய வேண்டும்.
அண்டை வீட்டார் சம்மதம் தெரிவித்தால்கூட உங்கள் வீட்டு ஜன்னல்களை அவர்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் வைக்காதீர்கள். மேலும், காற்று வெளிச்சம் அவர்களது வீட்டிற்குள் செல்லாத அளவில் உங்களது மதில் சுவரை உயர்த்திக் கட்டாதீர்கள்.
உங்களது குழந்தைகளுக்கு பழம் வாங்கி வந்தால், அதை அண்டை வீட்டுக் குழந்தைகள் பார்க்கும் அளவில் உங்கள் குழந்தைகளிடம் கொடுத்து வெளியில் அனுப்பி வைத்தால், பக்கத்து வீட்டு குழந்தைகளுக்காகவும் அப்பழங்களிலிருந்து ஒரு பகுதியை எடுத்து கொடுத்தனுப்புங்கள்'' என்று நபித்தோழரிடம் அண்டை வீட்டார் பற்றிய அனைத்து தகவல்களை விரிவாகவும் தெளிவாகவும் எடுதுரைத்தார்கள் காருண்ய நபி.
அண்டை வீட்டாருடன் நல்லுறவைப் பேணி வாழ்வதைத்தான் இஸ்லாம் மிகமிக வலியுறுத்துகிறது. இதனால், சமுதாயம் அமைதியையும், நிம்மதியையும் தழுவும். அத்துடன் ஒற்றுமையும் உறுதியும் பெருகும்.

First Published : 13 June 2013 03:22 PM IST

Saturday 1 June 2013

பணிவின் உயர்வு!


பணிவின் உயர்வு!

First Published : 30 May 2013 04:34 PM IST
அனைவரும் போற்றும் வகையில் மனிதர்களிடம் சொல் - செயல் அமைந்திருக்க வேண்டும். அப்படிப்பட்ட குணம் உள்ளோர் "நற்பண்பினர்' என அழைக்கப்படுவர். அனைத்து நற்பண்புகளையும் கடைப்பிடித்து ஒழுகும்படி இஸ்லாம் பணிக்கிறது.
நற்பண்புகள் என்பது நபிமார்கள் மற்றும் நல்லோரின் குணங்களாகும். ஒரு மனிதன் நற்பண்புகளை பின்பற்றி வந்தால், அவருடைய கௌரவம் உயர்த்தப்படும். நற்குணம் கொண்டோர் பிரதி பலனை, இம்மை - மறுமை வாழ்வில் இறைவனால் பெறப்படுவர்.
'ஒருவரிடம் நற்குணங்கள் இருந்தால், நிச்சயம் அவரிடம் இறையச்சம் இருந்தே தீரும். இறையச்சம் இருந்தால், அவரது செயல்கள் அனைத்தும் நற்செயல்களாக இருக்கும். எனவே, அவருக்கு இறைவனின் நல்லருள் கிடைப்பது உறுதி. மனிதர்களை சுவனத்தில் சேர்ப்பது இறையச்சமும், நற்குணங்களும்தான்'' என்பது நபிமொழியாகும். பிறருக்கு அதிக நன்மைகள் செய்பவர்கள்தான் இறைவனுக்குப் பிரியமானவர்கள்.
"பணிவு என்பது ஓர் உயர்வான குணம். பெருமை என்பது தாழ்வான குணம். நாம் அனைத்து மக்களிடமும் பணிவாக நடந்துகொண்டால், இறைவன் நம்மை உயர்வான அந்தஸ்தில் வைத்திருப்பான். உலகில் பெருமையாக நடப்பவர்களை கீழ் மட்டத்திலேயே வைத்திருப்பான் (அல்குர்ஆன்: 17:23:24)''.
ஒரு மனிதரிடம் பணமும் - பதவியும் வந்து சேரும்போது, பணிவும் கனிவும் அதிகரிக்க வேண்டும். இவ்வாறு ஏற்பட்டால், அவரது வாழ்வு, நோய்நொடியின்றி நலமுடன் அமையும். பெருமையும்-பந்தாவும் அதிகரித்தால் அவரது வாழ்வில் கேடு விளையும் என்பதில் சந்தேகமில்லை.
பணிவு என்கிற நற்பண்பானது உள்ளத்திலிருந்து வர வேண்டும். அதாவது பார்வை, சொல், செயல், நடை, உடைகளில் ஏற்படும் பணிவே உண்மையான பணிவாகும்.
"பணிவாக நடங்கள், பெருமையடிக்காதீர்கள். ஒருவர் மற்றவர் மீது வரம்பு மீறாதீர்கள்'' என நபி (ஸல்) அவர்கள் நவின்றுள்ளார்கள்.
"தர்மம் அளிப்பதால் பொருள் குறையாது. அல்லாஹ்விற்காக பணியும் எந்த மனிதரையும் அல்லாஹ் உயர்த்தாமல் விட்டதில்லை'' என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (நூல்:முஸ்லிம்).
பந்தானது பணிய பணிய அது உயரே எழும்புகிறது. பணியாமல் உயரே செல்லும் பந்து தாழ்ந்து கீழே விழுந்துவிடும். இதேபோன்றுதான் மனிதரும் பணிவாக செயல்பட செயல்படத்தான் உயர்வடைகின்றார். பணிவாக செயல்படாத மனிதர் தாழ்வு நிலையை அடைகின்றார்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தோல்வியை பணிவுடன் ஏற்றுக்கொண்டார்கள். மேலும், அவர்கள் மக்காவாசிகளுக்காக ஆடு மேய்ப்பாளராக இருந்து ஆடுகளை மேய்த்து பணிவைக் கற்றுக் கொண்டார்கள். ஒரு பிரயாணத்தில் கலந்துகொண்ட பெருமானார் அவர்களும், அவர்களது தோழர்களும் ஓரிடத்தில் தங்க நேரிட்டது. சமையலுக்கான வேலைகள் முழு வீச்சில் நடந்தபோது, ஒவ்வொருவரும் ஒரு பணியைத் தேர்ந்தெடுத்தனர். அன்றைய ஆட்சித் தலைவராகத் திகழ்ந்த பொறுமையின் சிகரம் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் சமையலுக்கான விறகுகளை சேகரிக்கும் பணியை ஏற்றுக்கொண்டு, பணிவுடன் நடந்துகொண்டார்கள். இதுபோன்ற பணிவுதான் மிக்க உயர்வான பணிவாகும்.
மேற்கூறப்பட்ட நற்குணங்கள் யாவும் பணிவின் அடையாளங்கள். எனவே, பணிவோடு நடந்து மனநிறைவோடு வாழ்வோம்.

Thanks Dinamani Vellimani -31-05-2013

Friday 10 May 2013

நல்லோரின் நட்பு!


மனிதர்கள் தங்களுக்குள் உண்டாக்கிக்கொள்ளக் கூடிய நட்பிற்கு இஸ்லாம் மார்க்கம் அதிக மதிப்பளிக்கிறது. சிரித்து மகிழவும், வீண் விளையாட்டில் பொழுதைக் கழிக்கவும் மட்டுமே நட்பு என்ற சொல் பொருளாகாது. நட்பு என்பது ஓர் உன்னதமான செயலாகும்.
ஒவ்வொரு மனிதருக்கும் நண்பர்கள் இருப்பது போல நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும் நண்பர்கள் இருந்தனர். நபிகளாருடன் சேர்ந்தே இருப்பவர்களை "ஸஹாபாக்கள்' (நபித்தோழர்கள்) என்று அழைத்தனர்.
நபிகளாருக்கு பின் இஸ்லாமிய ஆட்சியின் கலீஃபாவாக (ஜனாதிபதி) அமர்த்தப்பட்டவர் நபிகளாரின் உற்ற நண்பராகிய அபூபக்கர் (ரலி) அவர்களே ஆவார்.
நட்புக்கு அழகிய முன் மாதிரியாக இருப்பவர் யார் என்பதை நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் விளக்கியுள்ளதைக் காண்போம்.
"'நல்ல நண்பருக்கு எடுத்துக்காட்டு கஸ்தூரி விற்பவரைப் போன்றவராவார். உமக்கு அதைத் தரலாம் அல்லது அவரிடம் அதை நீர் வாங்கலாம். அல்லது அவரிடமிருந்து நறுமணத்தையேனும் நீர் பெறலாம். கெட்ட நண்பருக்கு எடுத்துக்காட்டு இரும்புப் பட்டறையில் நெருப்பை ஊதுபவர் போன்றவராவார். உமது ஆடையை அவர் எரித்து விடலாம் அல்லது அவரிடமிருந்து துர்வாடையையாவது அடைந்தே தீருவீர் (நூல்:புகாரி, எண்: 2110, முஸ்லிம்: எண்: 5124)''.
இரு சகோதரர்கள் சந்தித்துக்கொண்டால், ஸலாம் கூறுவதையும், "முஸô ஃபஹா' (கை கொடுத்தல்), "முஆனகா' (அணைத்துக் கொள்வது) செய்வதையும் இஸ்லாம் வலியுறுத்துகிறது. இதனால் நண்பர்களுக்கிடையே அன்பும் நேசமும் அதிகரிக்கும்.
நீங்கள் வளமாக இருக்கும்போது உங்கள் நண்பர்கள் உங்களைப் புரிந்துகொள்வார்கள். ஆனால் நீங்கள் வறுமையாக இருக்கும்போது உங்கள் நண்பர்களை நீங்கள் புரிந்துகொள்ளலாம். நட்புக்கு பணம், பதவி, செல்வாக்கு போன்ற மேல் பூச்சு தேவை இல்லை.
நபிகளார் பல நேரங்களில் தமது தோழர்களின் பண்பினையும், அவர்களது செயல்பாடுகளையும் பாராட்டி ஊக்கப்படுத்தியுள்ளார்கள். அதுபோல், அவர்களது தவறுகளை நேருக்கு நேர் கண்டித்து, திருந்திக்கொள்ள வழி வகுத்துத் தந்துள்ளார்கள்.
நமக்கு எத்தனை நண்பர்கள் இருக்கிறார்கள் என்ற எண்ணிக்கை முக்கியமல்ல. ஆனால், நம்மிடம் நட்பு வைத்திருப்பதை பெருமையாக எண்ணி மகிழ்ச்சி அடைபவர்கள் எத்தனை பேர் என்ற எண்ணிக்கையே மிக மிக முக்கியம்.
நமக்கும் நல்லோர்களின் நட்பு கிடைத்து அதன் மூலம் வெற்றி கிடைக்க இறைவன் நல்லருள் புரிவானாக.
By ஜி. அஹ்மது
Thanks Dinamani Vellimani 10-05-2013