Saturday 1 June 2013

பணிவின் உயர்வு!


பணிவின் உயர்வு!

First Published : 30 May 2013 04:34 PM IST
அனைவரும் போற்றும் வகையில் மனிதர்களிடம் சொல் - செயல் அமைந்திருக்க வேண்டும். அப்படிப்பட்ட குணம் உள்ளோர் "நற்பண்பினர்' என அழைக்கப்படுவர். அனைத்து நற்பண்புகளையும் கடைப்பிடித்து ஒழுகும்படி இஸ்லாம் பணிக்கிறது.
நற்பண்புகள் என்பது நபிமார்கள் மற்றும் நல்லோரின் குணங்களாகும். ஒரு மனிதன் நற்பண்புகளை பின்பற்றி வந்தால், அவருடைய கௌரவம் உயர்த்தப்படும். நற்குணம் கொண்டோர் பிரதி பலனை, இம்மை - மறுமை வாழ்வில் இறைவனால் பெறப்படுவர்.
'ஒருவரிடம் நற்குணங்கள் இருந்தால், நிச்சயம் அவரிடம் இறையச்சம் இருந்தே தீரும். இறையச்சம் இருந்தால், அவரது செயல்கள் அனைத்தும் நற்செயல்களாக இருக்கும். எனவே, அவருக்கு இறைவனின் நல்லருள் கிடைப்பது உறுதி. மனிதர்களை சுவனத்தில் சேர்ப்பது இறையச்சமும், நற்குணங்களும்தான்'' என்பது நபிமொழியாகும். பிறருக்கு அதிக நன்மைகள் செய்பவர்கள்தான் இறைவனுக்குப் பிரியமானவர்கள்.
"பணிவு என்பது ஓர் உயர்வான குணம். பெருமை என்பது தாழ்வான குணம். நாம் அனைத்து மக்களிடமும் பணிவாக நடந்துகொண்டால், இறைவன் நம்மை உயர்வான அந்தஸ்தில் வைத்திருப்பான். உலகில் பெருமையாக நடப்பவர்களை கீழ் மட்டத்திலேயே வைத்திருப்பான் (அல்குர்ஆன்: 17:23:24)''.
ஒரு மனிதரிடம் பணமும் - பதவியும் வந்து சேரும்போது, பணிவும் கனிவும் அதிகரிக்க வேண்டும். இவ்வாறு ஏற்பட்டால், அவரது வாழ்வு, நோய்நொடியின்றி நலமுடன் அமையும். பெருமையும்-பந்தாவும் அதிகரித்தால் அவரது வாழ்வில் கேடு விளையும் என்பதில் சந்தேகமில்லை.
பணிவு என்கிற நற்பண்பானது உள்ளத்திலிருந்து வர வேண்டும். அதாவது பார்வை, சொல், செயல், நடை, உடைகளில் ஏற்படும் பணிவே உண்மையான பணிவாகும்.
"பணிவாக நடங்கள், பெருமையடிக்காதீர்கள். ஒருவர் மற்றவர் மீது வரம்பு மீறாதீர்கள்'' என நபி (ஸல்) அவர்கள் நவின்றுள்ளார்கள்.
"தர்மம் அளிப்பதால் பொருள் குறையாது. அல்லாஹ்விற்காக பணியும் எந்த மனிதரையும் அல்லாஹ் உயர்த்தாமல் விட்டதில்லை'' என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (நூல்:முஸ்லிம்).
பந்தானது பணிய பணிய அது உயரே எழும்புகிறது. பணியாமல் உயரே செல்லும் பந்து தாழ்ந்து கீழே விழுந்துவிடும். இதேபோன்றுதான் மனிதரும் பணிவாக செயல்பட செயல்படத்தான் உயர்வடைகின்றார். பணிவாக செயல்படாத மனிதர் தாழ்வு நிலையை அடைகின்றார்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தோல்வியை பணிவுடன் ஏற்றுக்கொண்டார்கள். மேலும், அவர்கள் மக்காவாசிகளுக்காக ஆடு மேய்ப்பாளராக இருந்து ஆடுகளை மேய்த்து பணிவைக் கற்றுக் கொண்டார்கள். ஒரு பிரயாணத்தில் கலந்துகொண்ட பெருமானார் அவர்களும், அவர்களது தோழர்களும் ஓரிடத்தில் தங்க நேரிட்டது. சமையலுக்கான வேலைகள் முழு வீச்சில் நடந்தபோது, ஒவ்வொருவரும் ஒரு பணியைத் தேர்ந்தெடுத்தனர். அன்றைய ஆட்சித் தலைவராகத் திகழ்ந்த பொறுமையின் சிகரம் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் சமையலுக்கான விறகுகளை சேகரிக்கும் பணியை ஏற்றுக்கொண்டு, பணிவுடன் நடந்துகொண்டார்கள். இதுபோன்ற பணிவுதான் மிக்க உயர்வான பணிவாகும்.
மேற்கூறப்பட்ட நற்குணங்கள் யாவும் பணிவின் அடையாளங்கள். எனவே, பணிவோடு நடந்து மனநிறைவோடு வாழ்வோம்.

Thanks Dinamani Vellimani -31-05-2013

No comments:

Post a Comment