Friday 14 June 2013

சமுதாயம் அமைதியாகும்!.......


மனித நேயமிக்கவர் அண்டை வீட்டாரோடு மிகச் சிறந்த உறவைக் கொண்டிருக்க வேண்டும் என இஸ்லாம் வலியுறுத்துகிறது. மேலும், எவரும், சொல்லாத மிக உன்னத வழியில் மனித உறவுகளைச் சீரமைப்பதில் இஸ்லாம் தனித்து நிற்கிறது.
ஒவ்வொருவரின் வாழ்வில் திடீரென ஏற்படும் நல்லது - கெட்டது போன்ற சம்பவம் ஏற்படின் உடனே முன் நின்று ஆவண உதவி, ஒத்தாசைகளை செய்பவர் அண்டை வீட்டாரே. நமது சொந்த பந்தங்கள் தகவல் தெரிந்தபின்தான் வர இயலும். இது யதார்த்தமான உண்மையாகும்.
அண்டை வீட்டாருக்கு நன்றி செலுத்தும்படி இறைவன் அல்குர்ஆன் அத்யாயம் 4, வசனம் 36ல் கூறுவதைக் காண்போம்:
"அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள். அவனுக்கு இணை வைக்காதீர்கள். தாய் - தந்தையர்க்கு நன்றி செலுத்துங்கள். உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும், அண்டை வீட்டாருக்கும், நண்பர்களுக்கும், பணியாளர்களுக்கும் நன்றி செலுத்துங்கள். எவன் கர்வம் கொண்டு பெருமையாக நடக்கிறானோ, அவனை நிச்சயமாக அல்லாஹ் நேசிப்பதில்லை''.
நபித் தோழர் ஒருவர், ""அண்டை வீட்டாரிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும்?'' என்று அண்ணலாரிடம் கேட்டார்.
"அண்டை வீட்டாரைக் காணும்போது புன்முறுவல் பூப்பது, அவரைக் காணவில்லை என்றால் அவரைப் பற்றி விசாரிப்பது, அவர் வழித் தவறி விட்டால், அவரை நேர்வழிப்படுத்துவது, அவரது நற்பண்புகளை பரவச் செய்வது, அவரது குறைகளை மறைப்பது போன்ற நற்செயல்களைச் செய்ய வேண்டும்.
அண்டை வீட்டாருக்கு நோய் ஏற்பட்டால் சென்று நலம் விசாரித்து ஆறுதல் கூறுவது, அவர்களின் சுக துக்கங்களில் பங்குகொண்டு நன்மைகளைச் செய்து தேவைகளைப் பூர்த்தி செய்வது, மற்றும் அவர்கள் கடன் கேட்டால் கொடுத்து உதவுவது.
அண்டை வீட்டார் மரணித்துவிட்டால் அவரது உடலை அடக்கம் செய்யும் வரை சென்று நல்லடக்கத்தில் பங்கேற்பது, அவரது பிள்ளைகள் மீது இரக்கம் காட்டுவது போன்ற நற்செயல்களைச் செய்ய வேண்டும்.
அண்டை வீட்டார் சம்மதம் தெரிவித்தால்கூட உங்கள் வீட்டு ஜன்னல்களை அவர்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் வைக்காதீர்கள். மேலும், காற்று வெளிச்சம் அவர்களது வீட்டிற்குள் செல்லாத அளவில் உங்களது மதில் சுவரை உயர்த்திக் கட்டாதீர்கள்.
உங்களது குழந்தைகளுக்கு பழம் வாங்கி வந்தால், அதை அண்டை வீட்டுக் குழந்தைகள் பார்க்கும் அளவில் உங்கள் குழந்தைகளிடம் கொடுத்து வெளியில் அனுப்பி வைத்தால், பக்கத்து வீட்டு குழந்தைகளுக்காகவும் அப்பழங்களிலிருந்து ஒரு பகுதியை எடுத்து கொடுத்தனுப்புங்கள்'' என்று நபித்தோழரிடம் அண்டை வீட்டார் பற்றிய அனைத்து தகவல்களை விரிவாகவும் தெளிவாகவும் எடுதுரைத்தார்கள் காருண்ய நபி.
அண்டை வீட்டாருடன் நல்லுறவைப் பேணி வாழ்வதைத்தான் இஸ்லாம் மிகமிக வலியுறுத்துகிறது. இதனால், சமுதாயம் அமைதியையும், நிம்மதியையும் தழுவும். அத்துடன் ஒற்றுமையும் உறுதியும் பெருகும்.

First Published : 13 June 2013 03:22 PM IST

No comments:

Post a Comment