Saturday 9 November 2013

வாழ்க்கையின் தொடக்கம் அழுகை


நாகை.ஜி.அஹ்மது

உலகில் பிறக்கும் அனைத்து மனிதனின் வாழ்க்கையின் தொடக்கமும் அழுகைதான். அங்கே தொடங்கும் நமது வாழ்க்கை அழுகையிலேயே முடிகிறது.
குழந்தையாக இருந்தபோது நமது அழுகை அனிச்சை செயல்; அறியாமலே அழுதோம்.
முதல் அழுகை மூச்சு விடுவதற்கு, நுரையீரல்களை ஒழுங்குப்படுத்திக் கொள்ள; அடுத்தடுத்த அழுகைகள் பசியை அறிவிக்க. குழந்தைகள் இவ்வுலகில் பிறக்கும் போது அழுது கொண்டே பிறக்கின்றன. குழந்தை பிறந்து ஓராண்டு வரையில் அழுதுகொண்டேதான் இருக்கும். அதன் அழுகையை நிறுத்த வேண்டாம்.
ஏனென்றால், குழந்தை பிறந்தது முதல் நான்கு மாதங்கள் வரை அழுகின்ற அழுகையானது 'கலிமா'(இஸ்லாத்தின் மூலமந்திரம்) ஆக இருக்கும். அடுத்த நான்கு மாத அழுகை நபிகள் நாயகம்(ஷல்) அவர்கள் கூறும் 'ஸ்லவாத்'( நபி புகழ்) ஆக இருக்கும். அடுத்த நான்கு மாத அழுகை தனது பெற்றோருக்காக கேட்கும் 'துஆ'(இறைஞ்சுதல்) ஆக இருக்கும்.
வளரும் போதும், வளர்ந்த பிறகும் அழுவதை அறிந்து அழுகின்றோமா? எப்போது அழலாம்-எப்படி அழலாம்-எங்கே அழலாம்? என்பதையெல்லாம் எப்படித் தீர்மானிக்கின்றோம்? நாமே தீர்மானிக்கின்றோமா? அல்லது மற்றவர்கள் தீர்மானிக்கின்றார்களா?
யோசித்துப் பாருங்கள்!
பெண்கள் எதற்கெடுத்தாலும் அழுவார்கள். ஆனால், ஆண்கள் அப்படி இல்லை. ஆண்கள் அழவே கூடாது! ஏன் இப்படி? அழுகை என்பது பலவீனம் என்கிற கருத்துதான் அடிப்படை. பெண்களின் அழுகை அவர்களின் பலவீனமாகவே புரிந்து கொள்ளப்படுகிறது.
அல்லற்பட்டு ஆற்றாத கண்ணீர்என்று திருவள்ளுவர் சொல்வது துன்பத்தின் வெளிப்பாடுதான். கவிக்கோ அப்துல் ரஹ்மான்,'தட்டாதே திறந்திருக்கிறது' என்ற நூலில் கண்ணீர் உப்பு கலக்காவிட்டால் வாழ்க்கை சுவைக்காதுஎன இரண்டே வரிகளில் அழுங்கள் அது நல்லது என்று சுவைப்பட கூறியுள்ளார்.
அழுகை என்பது ஒரு வெளிப்பாடு; மகிழ்ச்சியைப் போல. வருத்தம் என்பது ஓர் உணர்ச்சி. மகிழ்ச்சியை வெளிப்படுத்த பல வழிகள் இருப்பது போல வருத்தத்தை வெளிக்காட்ட பல வெளிப்பாடுகள் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் அழுகை.
எனவே உங்களுக்கு ஏதாவது இன்னல்கள் ஏற்பட்டால் அழுது உங்கள் சுமையைக் குறைத்துக்கொள்ளுங்கள்.

Thanks Tamil.TheHindu News Paper Published @ 09-11-2013

No comments:

Post a Comment