Friday 17 January 2014

நற்செயல்கள் புரிவோம்...


எல்லாம் வல்ல இறைவன் ஒருவனே; அவனைத் தவிர வணங்க தகுதி படைத்தவன் வேறு யாருமில்லை' என மனத்தால்- நாவால்- செயலால் உறுதிப்படுத்துவதே (ஈமான்) "இறை நம்பிக்கை'யாகும். ஈமான் கொண்டவர்கள் (முஃமிஃமின்கள்) இறை நம்பிக்கையாளர்கள் என்று அழைக்கப்படுவர்.
"ஈமானும் - இஸ்லாமும்' ஒன்று என்னும் பொருள்பட திருக்குர் ஆனில் கூறப்பட்டுள்ளது. இறைவன் ஒருவன் என உள்ளத்தால் நிர்ணயம் செய்வதற்கு "ஈமான்' என்றும், செயல் முறையால் காட்டுவதற்கு  "இஸ்லாம்' என்றும் கூறப்படுகிறது.
உலகப் பேராசையே இறை நம்பிக்கைக்கு எதிராக இன்று நம்முன் நிற்கிறது. சிற்றின்பங்களுக்காக செய்யப்படும் பாவங்களினால், ஈமான் கரையப்பட்டு மறுமையின் பேரின்பத்தை இழக்கச் செய்கிறது.
நபித் தோழர்கள் தங்களது உயிர் பிரியும் நேரத்தில் கூட, தங்களது (ஈமான்) இறை நம்பிக்கை, (இபாதத்து) வணக்க வழிபாடு பற்றித்தான் கவலை கொண்டனர். மாறாக, தாங்கள் இறை மறுப்பாளர்களால்  கொல்லப்படுவது குறித்தோ, அதனால் ஏற்படும் வேதனை குறித்தோ கவலைப்பட்டதே இல்லை.
1. நாம் உண்ணும் உணவு நேர்மையான வழியில் ஈட்டியதாக இருக்க வேண்டும். 2. பிறர் பற்றி புறம் பேசுவதும், கேட்பதும் குற்றம் என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளனர். எனவே பிறர் பற்றி புறம்  பேசாது இருக்க வேண்டும். 3. ஓர் அடியானின் இதயத்தில் ஈமானும் பொறாமையும் ஒன்று சேராது. எனவே, மற்றவரைப் பார்த்து பொறாமைப்பட வேண்டாம். 4. உலக இன்பத்தினை மனதால்  விரும்பினால் ஷைத்தான் கேலி செய்வான். எனவே, உலக இன்பங்களை மனத்தால் கூட விரும்ப வேண்டாம்.
மேற்கண்ட நான்கு வித நற்செயல்களை கடைப்பிடித்து, மனத்தூய்மையுடன் செயலாற்றினால், இறைவன் நமக்கு நற்பேற்றினை அருள்வான்.
ஒரு நன்மையான செயலை நல்ல நோக்கத்துடன் செய்தால், அது எவ்வளவு சிறியதாய் இருப்பினும், அதை மலையளவு பெரிய செயலாக இறைவன் ஏற்பான். நல்ல எண்ணமும், நல்ல நோக்கமும்  இல்லாத செயல் எவ்வளவு பெரியதாய் இருப்பினும்,அதை இறைவன் ஏற்க மாட்டான்.
இறைநேசர் நிஜாமுதீன் (ரஹ்) அவர்களிடம் ஒருவர் இப்படிக் கேட்டார். ""உலக நோக்கங்கள் அற்ற தூய்மையான எண்ணத்துடனும், உலக நோக்கங்களோடும் நிறைவேற்றப்பட்ட செயல்களினால்  மறுமையில் ஏற்படும் முடிவு ஏதுவாக இருக்கும்?''
கோதுமை மாவும், தண்ணீரும் கொண்டுவரச் செய்து, இரண்டையும் ஒரே பாத்திரத்தில் போட்டு பிசையும்படி கூறினார். அதன்பின், தண்ணீரையும், மாவையும் தனித்தனியாகப் பிரித்து எடுக்கும்படி  கூறினார் இறைநேசர்.
உடனே, அம்மனிதர், ""நீங்கள் கூறுவது எப்படி முடியும்? பிசைந்த மாவிலிருந்து தண்ணீரைத் தனியாகப் பிரிக்க முடியாதே'' என்றார்.
"இதே போல்தான், எந்த எண்ணத்துடன் ஒரு செயல் உலகில் நிறைவேற்றப்படுகிறதோ, அந்த எண்ணம் அச்செயலுடன் கலந்து விடுகிறது. மறுமையில் அதற்கான கூலி நிச்சயம் உண்டு. மாவிலிருந்து  தண்ணீரைப் பிரிக்க முடியாதது போல், நற்செயலில் கலந்துவிட்ட, தீய எண்ணத்தை மறுமையில் பிரிக்க முடியாது'' என்று விளக்கிக் கூறினார் இறை நேசர் நிஜாமுதீன் (ரஹ்)
"உங்களுடைய இறை நம்பிக்கையை தூய்மையாக வைத்துக்கொள்ளும். ஒரு தூய்மையான செயல் உங்களை நரகத்திலிருந்து காப்பாற்றும்"" நபிகள் நாயகம் (ஸல்).
பாவம் செய்த ஒரு மனிதன் அல்லாஹ்வின் அச்சத்தால் அழுது - தொழுது இறைவனிடம் மன்னிப்பு கேட்டால், இறைவன் நிச்சயம் மன்னிப்பான். அந்த மன்னிப்பால், பாவம் செய்த அம்மனிதன் நரகம்  செல்வதும் முடியாத செயலாகிவிடும்.
எனவே, இறை கட்டளைப்படியும், நபிகளாரின் சொல், செயல்படியும் நற்செயல்களைப் புரிந்து சுவனம் புகுவோம்.


First Published : 16 January 2014 02:26 PM IST

No comments:

Post a Comment