Saturday 11 January 2014

இறைவனின் அருட்கொடை...

இறைவனின் அருட்கொடை

First Published : 09 January 2014 03:06 PM IST
இறைவன் முதன் முதலில் இவ்வுலகைப் படைத்தான். அதன்பின் மனிதனையும், அனைத்து உயிரினங்களையும் படைத்தான். அவர்கள் உயிர் வாழ மரம், செடி, கொடி, ஆறு, குளம், குட்டை, கடல், மலை,  சூரியன், சந்திரன் என அனைத்தையும் உண்டாக்கினான்.
மண்ணுக்கும் மனிதர்களுக்கும் ஊற்றுக்கண் தண்ணீர்தான் என்பதை உலகே அறியும். "நீரின்றி அமையாது உலகு' என திருவள்ளுவர் கூறியுள்ளார். மேலும், நாம் உண்ணும் சோறு (நெல்) தரும்  விவசாயத்திற்கு உயிர் நாடி தண்ணீர்தான்.
இறைவன் தனது திருமறை அத்.7, வசனம் 57இல் மழையை பூமியில் எப்படி பொழியச் செய்தான் என்பதைக் காண்போம்.
"தனது அருள் மழைக்கு முன் நற்செய்தி சொல்லக்கூடியதாக (குளிர்ந்த) காற்றை அனுப்பி வைக்கிறான். அது கனமான மேகத்தை சுமக்கும்பொழுது மழையை (வறண்ட) ஊரின் பக்கம் பொழியச்  செய்கிறோம். அதன்மூலம் எல்லா (வகை) கனி வர்க்கங்களையும் நாம் வெளிப்படுத்துகிறோம். இவ்வாறே மரணித்தவர்களை (மண்ணறையிலிருந்து) நாம் எழுப்புவோம். நீங்கள் நல்லுபதேசம் பெறவே  (இதனைக்) கூறுகிறோம்''.
ஆனால், கோடை காலத்தில் காற்றும், வெப்பமுமாக இருப்பதால் மேகங்கள் தோன்றினாலும் மழை பொழிய வாய்ப்பில்லை. ஆகையால், கோடை காலத்தில் ஆறு, குளம், குட்டைகளில் தண்ணீர்  வற்றிவிடக் கூடிய நிலை ஏற்படலாம்.
மழை நீர் தெளிவாகவும், மென்மையாகவும் இருக்கும். புல் பூண்டுகள், மரம், செடி, கொடிகளின் பசுமைக்கும் வளர்ச்சிக்கும் மழைநீரின் பங்கு அதிகம் தேவைப்படுகிறது. சூடான இரும்பில் மழைத்துளி  விழுந்தால், இரும்பு நீரை உறிஞ்சிவிடும். அதே நீர்த்துளி தாமரை இலைமேல் விழுந்தால், முத்துபோல் மின்னும், உருளும், சூரிய ஒளியில் காய்ந்துவிடும். அதே மழைத்துளி கடலிலுள்ள முத்துச்  சிப்பியில் விழுந்தால், சிப்பி அந்த நீர்த்துளியை முத்தாக வளர்த்து நமக்குத் தருகிறது. இது இறைவன் அருளிய அருட்கொடை.
பூமியில் மணல் இருந்தால்தான் மழைநீர் சொட்டுசொட்டாக நிலத்தில் இறங்கும். இதனால் நிலத்தடி நீரை சேமிக்க முடியும். மணல் இல்லை என்றால் மழை நீர் கழிவு நீராக கடலில்தான் சென்றடையும்.
எனவே, மழை நீர் கடலுக்குச் சென்றடையாமல் காப்பதற்கும், பெருமழையினால் ஏற்படும் வெள்ள ஆபத்தினைத் தடுப்பதற்கும், மழை பொழியாது வறட்சி ஏற்பட்டு, பூமி விளையாது பஞ்சம் - பட்டினி  சாவுகளை ஒழிப்பதற்குச் சிறந்த வழி, அனைத்து நதிகளையும் ஒன்றாக இணைப்பதேயாகும். அதாவது, "தேசிய நதிநீர் இணைப்புத் திட்டத்தினால்'தான் மழை நீரை சேமித்து அனைத்து உயிர்களையும்  காத்திட முடியும்.
எனவே, மணல் கொள்ளையைத் தடுத்து மரம் வளர்த்து இறைவனின் அருள் மழையைப்பெறுவோம்.

No comments:

Post a Comment