Friday 21 February 2014

இறைநம்பிக்கை - இறை நெறியோடு வாழ்வோம்...


 இறைநம்பிக்கை - இறை நெறியோடு வாழ்வோம்...


(இறைநம்பிக்கை), "இஸ்லாமும்' (இறை நெறியில் மனிதர்கள் வாழ இறைவன் நமக்கு அளித்த மார்க்கம்) ஒன்று என்ற பொருள்பட, திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளது. "இறைவன் ஒருவன்' என்று உள்ளத்தால் தீர்மானம் செய்வதற்கு "ஈமான்' என்றும், அதனை செயல் முறைப் படுத்துவதற்கு "இஸ்லாம்' என்றும் சொல்லப்படுகிறது.
இறைவன் யாரை வாழ நாடுகிறானோ, அவரை வாழ வைப்பான். யாரை மரணிக்க நாடுகிறானோ, அவரை மரணிக்கச் செய்வான். மேலும், உண்ட உணவை செரிக்கச் செய்து சத்துக்களையும், கழிவுகளையும் பிரிப்பதும் அவனேயாவான்.
பேசுவது, கேட்பது, பார்ப்பது, நடப்பது, அமர்வது, உறங்குவது, விழித்தெழுவது போன்ற நமது அனைத்து செயல்களுக்கும், இறைவன் மீது நாம் முழு நம்பிக்கை வைத்தால், இறைவன் நமக்கு உறுதுனையாக இருப்பான்.
மனிதன் பணத்தை சம்பாதிக்க பைத்தியமாகவும், வெறித்தனமாகவும் செயல்படுகிறான். அந்த எண்ணத்தை பல நேரங்களில் இறைவன் பொய்யாக்கி விடுகிறான். அவனது தொழிலில் இலாபம் கிடைக்கும் என பெரிதும் நம்பிக்கை வைத்திருப்பான். ஆனால், இறைவன் அவனுக்கு நஷ்டத்தை உண்டாக்கி விடுவான். அம்மனிதன் எதிர்பாராத அளவில் இலாபம் கிடைக்கும்படி செய்துவிடுவான். இறைவன்தான் நாடியதை மட்டுமே செய்வான். மனிதன் நாடுவதை செய்வதில்லை.
இறைவன் யார் யாரை எப்படி எப்படியெல்லாம் நடத்துகிறான் என்பதை தனது திருமறை அத்-3 - வசனம் 26இல் கூறுவதைக் காண்போம்:
( நபியே!) நீர் கூறுவீராக!: " அல்லாஹ்வே! ஆட்சிக்கு அதிபதியே! நீ நாடுகிறவருக்கு ஆட்சியைக் கொடுக்கிறாய், மேலும், நீ நாடியவரிடமிருந்து ஆட்சியைப் பறிக்கிறாய். இன்னும், நீ நாடியவரை கண்ணியப்படுத்துகிறாய்; நீ நாடியவரை இழிவு படுத்துகிறாய்; நன்மை (தீமை) அனைத்தும் உன்வசமே உள்ளன. நிச்சயமாக! நீ அனைத்தின் மீதும் பேராற்றல் உள்ளவன்.''
இறைவன், நபிதாவூது (அலை) நபி சுலைமான் (அலை) - நபி துல்கர்னைன்(அலை) ஆகியோருக்கு இவ்வுலக ஆட்சியை வழங்கினான். அம்மூன்று இறைத்தூதர்களும், மக்களின் நேசனாக விளங்கி நல்லாட்சி புரிந்து வந்த காரணத்தால், அவர்களுக்கு இறையருளையும், இறைப் பண்பையும் வழங்கினான் இறைவன்.
மாறாக, நம்ரூத் - ஃபிர்அவ்ன் - காரூன் போன்ற கொடுங்கோல் மன்னர்கள், ஆட்சி அதிகாரத்தில் செல்வ செழிப்புடன் வாழ்ந்து வந்தனர். அது சமயம், அவர்கள் உலக இச்சையில் மோகங் கொண்டு, தீச் செயல்களில் ஈடுபட்டு மக்களுக்கு இன்னல்கள் பல விளைவித்த காரணத்தால், இறைவன் கோப சாபத்தால் அனைத்தையும் இழந்து, அல்லலுற்று அழிந்தே போனார்கள் என்பது இஸ்லாமிய வரலாறு.
இறைவனை நாம் ஐங்காலம் தொழும் போது இறையைச் சத்துடனும், இறை நம்பிக்கையுடனும் தொழ வேண்டும். மலைகள் பூமியின் மீது எப்படி வலுவாக, அசைக்கமுடியாத அளவுக்கு அமைந்துள்ளதைக் காட்டிலும், ஒரு முஸ்லிம் இறைவனிடம் " நம்பிக்கை'யையும், "இறைநெறி'யையும் அதிகமதிகம் கொண்டிருக்க வேண்டும்.
எனவே, நாம் அனைவரும் இறை நம்பிக்கை, இறைநெறியோடு வாழ்ந்து இறைப் பண்பைப் பெறுவோம்!.

Thanks to |Dinamani Vellimani 21-02-2014

No comments:

Post a Comment